குமரி மாவட்டம் அருமனை அருகே பிலாங்காலவிளையை சேர்ந்தவர் அஸ்திகான் ஜோஸ்லின்.இவரது மனைவி நட்சத்திர பிரேமிகா(35). இவர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவி பொறியாளராக உள்ளார்.

சமீபத்தில் இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பணி நிமித்தமாக வந்துவிட்டு ஸ்கூட்டரில்மார்த்தாண்டம் திரும்பிக் கொாண்டிருந்தார். மேக்காமண்டபம் சாமிவிளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர் நட்சத்திர பிரேமிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் செயினை பறித்துவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த பிரேமிகா அப்பகுதியில் உளள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தக்கலை காவல் நிலையத்தில் அவர் புகார்அளித்தார். போலீஸார் அப்பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தை அடுத்த பலராமபுரம் பள்ளிக்கல் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினர். பலத்த படுகாயமடைந்த இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் கோட்டயம் பாலாவை சேர்ந்த அமல் என்பதும், விபத்தில் இறந்தவர் திருவனந்தபுரம் கடியங்குளத்தை சேர்ந்த சஜாதுஹான்என்பதும் தெரியவந்தது.

மேலும், மேக்காமண்டபம் பகுதியில் நட்சத்திர பிரேமிகாவிடமிருந்து நகையை சஜாதுஹானும், தானும் சேர்ந்து பறித்ததை அமல் ஒப்புக்கொண்டார். கேரளாவில் திருட்டுசம்பவங்களில் ஈடுபட்ட சஜாதுஹான் சில நாட்களுக்கு முன்புதான் திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் போலீஸார் குமரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமலிடம் இருந்து நட்சத்திர பிரேமிகாவின் 11 பவுன் செயினை போலீஸார் மீட்டனர்.