அமேசான் இந்தியா நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த அமேசான் உத்தரவிட்டுள்ளது.
தி மார்னிங் கான்டெக்ஸ்ட் என்ற தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த இணையதள நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்து ஒரு தகவலை வெளியிட்டது. அதில் அமேசானின் இந்திய சட்ட குழு, அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமேசான் நிறுவனங்களின் பொதுக் கணக்குகளை அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். இது இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8,500 கோடி சட்டக் கட்டணம் செலவழிக்கப்பட்டுள்ளது. அமேசான் கட்டணம் 8,500 கோடிக்கு மேல் சட்டக் கட்டணத்தில் செலவழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எங்கே போகிறது என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும், முழு அமைப்பும் லஞ்சத்தில் வேலை செய்வதாகத் தோன்றுகிறது, அது சிறந்த வணிக நடைமுறைகள் அல்ல என்றும் அந்த செய்தி தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து அமேசான் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு வெளியான நிலையில் அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் மூத்த நிறுவன ஆலோசகர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள பதிலில் ‘‘எவ்விதமான ஊழல் மற்றும் சட்ட விரோதமான பணிகளும் அமேசானில் இடமில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முறையாக ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விசாரணை குறித்து எவ்விதமான தகவல்களையும் தற்போது அளிக்க முடியாது’’ என அமேசான் அறிவித்துள்ளது.
அமேசான் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “ஊழலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். முறையற்ற செயல்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அவற்றை முழுமையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறோம். இந்த நேரத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அல்லது எந்த விசாரணையின் நிலை பற்றியும் நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.