தேவமணி படுகொலையியின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை உள்ளதாகவும் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிடக் கூடாது என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
”புதுவை காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மிகச்சிறந்த தொண்டரை இழந்த சோகத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனித உயிர்களைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் கூலிப்படைக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டியது. தேவமணி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப் படைகளை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்.
தேவமணி படுகொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தக் கொலையில் வெறும் கருவிகள்தான். தேவமணி படுகொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை உள்ளது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவமணி கொலை வழக்கைத் தவறாக நடத்தி உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை தப்பிக்கவிடக் கூடாது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தவறினால் பாமக சட்டப்படியான நடவடிக்கைகளையும், கடுமையான போராட்டங்களையும் முன்னெடுக்கும்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.