புதுச்சேரி: அரியாங்குப்பம் புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி, காட்சி பொருளாக உள்ளது. இதனால் இப்பகுதி போக்குவரத்தை சீரமைப்பதில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் இந்தப் பகுதியில் வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே இந்தப் போக்குவரத்து சிக்னலை சீரமைத்து, செயல்பட வைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனாலும், சிக்னல் பழுது சரி செய்யப்படவில்லை. இந்நிலையில், செயல்படாமல் காட்சி பொருளாக உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அமைப்பாளர் தீனா தலைமையில், நேற்று நடைபெற்றது.
இதில் துணை அமைப்பாளர் கர்ணா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன் மற்றும் பாரதி, வடிவேல், பரத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். “அடிக்கடி இந்த சிக்னல் பழுதாகி வருவதால் தரமான ‘மதர் போர்டு’ அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீஸார் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும்” என்று போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.