தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தகவல் தொழில்நுட்பவியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கங்கைகொண்டான், திருநெல்வேலி, விஸ்வநாதபுரம், ஓசூரில் ஆயத்த அலுவலக இட வசதிகளை அமைத்தல், சென்னை. கோட்டூர்புரத்தில் உள்ள ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம், தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள், நூல்கள் மின்னுருவாக்கம் மற்றும் தமிழ்
மின்னூலகத்தினை நவீனப்படுத்துதல் , தமிழ்நாடு கலாச்சார மின் நிலவரை ஏடு / தொகுப்பு, கன்னியாகுமரியில் புதிய தொழில்நுட்பக் கட்டடம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவித்தார். அவர் வெளியிட்ட 13 முக்கிய அறிவிப்புகள்:

> தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை (BPM) நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான கொள்கை

தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மைத் (BPM) துறையானது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஊக்கியாகவும், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும் திகழ்கிறது. மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை (BPM) நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு, ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும்.