உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில், பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் இந்தாண்டு கடைசியில் குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அதனால் அம்மாநிலங்களில் தேர்தல் பணிகளை பாஜக ெதாடங்கிவிட்டது.

அதேநேரம் அடுத்தாண்டு மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. மற்ற 3 மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. எதிர்கட்சிகளும் ஆளும் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வரும் 20, 21ம் தேதிகளில்  பாஜக சார்பில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வியூகம், தேவையான அமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக  கூறப்படுகிறது. அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 20ம் தேதியும், பொது  செயலாளர்கள் கூட்டம் மே 21ம் தேதியும் நடக்கிறது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துக் கொண்டு கட்சித் தொண்டர்களிடம் பேசுவார் என்று பாஜக உறுதி செய்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசும் ராஜஸ்தானில் கூட்டம்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனைக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் 13 முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அப்ேபாது, சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்வி, கட்சியில் ஒட்டுமொத்தமாக மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.