புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான திருப்பூர் எம்.சண்முகம், ‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்களுக்காகவோ அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரக்கூடாது, என வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை கடந்த ஜூன் 22 நள்ளிரவில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘அதிமுக பொதுக்குழுவில் ஏற்கெனவே நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிய தீர்மானங்கள் குறித்தோ அல்லது கட்சி விதிகளில் திருத்தம் செய்வது குறித்தோ எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். அதையடுத்து ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி தரப்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அதிமுகவின் பொதுக்குழுவில் தலையீடு செய்து நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. அதிமுக அவைத் தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கருத்தை பொறுத்தே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படும்.

கட்சி விதிகளின்படி பொதுக்குழுவுக்கே அனைத்து அதி்காரங்களும் உள்ளது. அதன்படி, விதிகளை திருத்தம் செய்யவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 22-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

பெரம்பலூர் நிர்வாகிகள்

இதற்கிடையில், ஓபிஎஸ் ஆதரவாளரான, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ராமச்சந்திரன் மற்றும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்று சென்னையில் இபிஎஸ்-ஐ சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மொத்தம் 2,665 பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், இபிஎஸ்-க்கு ஆதரவாக 2,441 இருப்பதாகவும், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடத்த ஆதரவுக் கடிதம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 224 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

மேலும், வரும் 11-ம் தேதி பொதுக்குழுவை வானகரத்துக்குப் பதிலாக, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் நடத்தலாமா என்றும் இபிஎஸ் தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர்.

அதற்காக, கட்சி நிர்வாகிகள் சிலர் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நேற்று முன்தினம் சென்று ஆய்வும் மேற்கொண்டனர். இறுதியில், வானகரத்திலேயே நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை நடத்த இபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளதாகவும், அதைதடுக்க ஓபிஎஸ் தரப்பு அனைத்து வழிகளிலும் முயன்று வருவதாகவும் நடுநிலை அதிமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.