குஜராத் மாநிலம் ஜாம்நகர் பிரிவில் விமானப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் யோகேந்தர் குமார். விமானப் படையைச் சேர்ந்தவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டநிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்றும் கரோனாவை தடுக்க ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்வதாகவும் மேலதிகாரிக்கு யோகேந்தர் குமார் கடிதம் எழுதினார். ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு யோகேந்தர் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் யோகேந்தர் குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங்க் வியாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நாடு முழுவதும் விமானப்படையைச் சேர்ந்த 9 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒருவர் மட்டும் விளக்கம் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். விமானப்படையினர் கரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற உத்தரவு உள்ளது’’ என்று தெரிவித்தார். எனினும், நீக்கப்பட்ட விமானப்படை ஊழியர் பெயர் மற்றும் விவரங்களை மத்திய அரசு மனுவில் தெரிவிக்கவில்லை.