அஜித் நடிக்கும் ‘ஏகே61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வலிமை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் நடிக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3வது முறையாக அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது. அதன்படி, ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன் இருவரும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுகின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இன்று தொடங்க உள்ளது.

இதற்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 2 மாதங்கள் அங்கேயே படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில், அஜித் எப்படி அந்த வங்கிக் கொள்ளைக்குள் நுழைகிறார் என்பதை வைத்து பக்கவான ஸ்கிரிப்டை வினோத் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஸ்கிரிப்டை அஜித்திடம் வினோத் விவரித்தபோது, நல்லவனாகவும், கெட்டவனாகவும் இல்லாத தனது கதாபாத்திர வடிவமைப்பு அவரை பெரிதும் ஈர்த்துள்ளதாம்.

முன்னதாக, படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தபு அல்லது ஐஸ்வர்யா ராய் பச்சனை படக்குழு நாடியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை ஒருவரிடம் ஹீரோயினாக நடிக்க பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஹீரோயின், படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.