உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 469 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள் உள்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.17) தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உறுதிமொழியைப் படிக்க, போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு பரிசாக வழங்கப்படுகிறது.
7 சுற்றுகள் முடிவு: காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை 7 சுற்றுகள் முடிந்துள்ளது. 469 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இதுவரை 225 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 7 சுற்றுகளின் முடிவில், பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 23 காளைகளை அடக்கி முதல் இடத்திலும், ஏனாதியைச் சேர்ந்த அஜய் 17 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்திலும், அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் 10 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
29 பேர் காயம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை மாடுபிடி வீரர்கள் 9 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 6 என மொத்தம் 29 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 12 பேருக்கு பலத்த காயங்களும், 17 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 29 பேரில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.