சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான  ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி  திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழா தினந்தோறும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வீதி உலா நடைபெற்று வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை ஆயிரம் கால்  மண்டபத்திற்க்கு கொண்டு வந்த தீட்சிதர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட  சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து அருளினர்.
தேரின் முன்பு சாலையில் பெண்கள் மா கோலம் இட்டும் சிவனடியார்கள் நடனமாடியும் வரவேற்று வருகின்றனர். தேர் நான்கு மாட வீதிகளை இன்று மலைக்குள் வலம் வந்து நிலையை அடையும்.
ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனித் திருமண திருவிழாவின் முக்கிய நிகழ்வான தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.