முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் 4 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2 முக்கிய துறைகளாக கருதப்பட்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக 4.85 கோடி ரூபாய் அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணியிலிருந்து தங்கமணியின் மகன் மற்றும் மனைவியின் இல்லங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. தங்கமணியின் உறவினர்கள் மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள் என 69 இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகரில் நெடுஞ்சாலை நகர் பகுதியிலுள்ள ராஜாபுரம் பகுதியில் தங்கமணியின் மகன் தரணீதரனின் மாமனார்வீ டு உள்ளது. இங்கு தான் தரணீதரன் வசித்து வருகிறார். இங்கு காலை 6.30 மணியிலிருந்து சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சேலம் மாவட்ட துணை கண்காணிப்பாளராக உள்ள கிருஷ்ணராஜ் தலைமையில் 7 போலீசார் இந்த வீட்டில் காலை முதலே சோதனை நடந்து கொண்டுள்ளனர். சுமார் 4 மணி நேரமாக இந்த சோதனையானது நீடித்து வருகிறது. தங்கமணியின் நெருங்கிய நண்பரும் நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்ததாரராக இருந்த குழந்தைவேலு என்பவர் ரெட்டிப்பட்டி பகுதியில் அஸ்வா பார்க் என்ற நட்சத்திர ஓட்டலை கட்டியுள்ளார். அங்கும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. குழந்தைவேல் நரஜோதிப்பட்டி என்ற இடத்தில் வசித்து வருகிறார். அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. குழந்தைவேலின் மகன் மணிகண்டன் வீடு மரபுனேறு பகுதியில் உள்ளது. அங்கும் சோதனை என மொத்தம் 4 இடங்களில் இன்று காலையில் இருந்து 4 மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மட்டுமில்லாமல் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புபோலீசார் என சுமார் 20 பேர் இந்த 4 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் சோதனை நடைபெறுவதன் காரணமாக பல்வேறு ஆவணங்கள் கிடைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.