வேலூர்: தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் வேலூர் மீன் மார்க் கெட்டில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாது காப்பு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கெட்டுப்போன 12 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

மீன்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என கூறப்படுகிறது.

பார்மலின் ரசாயனம் கலந்த மீன்களை உண்ணும்போது மனிதர்களின் தோல், கண்கள் பாதிக்கப்படுவதுடன் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பும் ஏற்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் இருப்பதால் கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் கெடாமல் இருக்க பார்மலின் ரசாயனம் கலந்திருக்கும் என்ற அச்சத்தால் அது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

வேலூர் கோட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரவிச் சந்திரன், கந்தவேல் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, மீன் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த மீன்களை ஆய்வு செய்ததுடன் இருப்பில் இருந்த மீன்களையும் ஆய்வு செய்து மாதிரிகளையும் சேகரித்தனர்.

இதில், பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் எதுவும் விற்கப் படவில்லை என முதற் கட்ட ஆய்வில் தெரியவந்தது. சில கடைகளில் கெட்டுப்போன மீன் மற்றும் இறால் வைத்திருப்பது தெரியவந்தது. சுமார் 12 கிலோ அளவுக்கு கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.