ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் அடிலெய்டில் நடக்கும் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
இங்கிலாந்து, ஆஸ்திேரலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல்ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
இந்த டெஸ்ட்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸி. அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சில ஓவர்கள் மட்டும் வீசியநிலையில் அவர் ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஹேசல்வுட்டுக்கு நடத்தப்பட்டபரிசோதனையில் அவருக்கு லேசான காயம் மட்டுமே இருப்பதால் ஒருவாரம் ஒய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடிலெய்டில் வரும் வியாழக்கிழமை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஹேசல்வுட் விளையாடமாட்டார்.
பகலிரவு போட்டியில் இதுவரை 32 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்லரெகார்ட் வைத்திருக்கும் ஹேசல்வுட் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குவது சற்று பின்னடைவுதான். ஹேசல்வுட்டுக்கு மாற்றாக ஹை ரிச்சார்ட்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். கூடுதலா, வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் நீஸர், சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்பீப்ஸன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “ஹேசல்வுட்டுக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அடிலெய்ட் டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிட்னிக்கு நேற்றுபிற்பகலில்தான் ஹேசல்வுட் வந்தார். அவரின் காயத்தை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறிதுஓய்வு தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றம், உடற்தகுதியைப் பொறுத்து சிட்னியில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்பது உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவதன்அடிப்படையில் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.