கரோனா காரணமாக செமஸ்டர் தேர்வுகளை காலதாமதமாக நடத்துவதால் தற்போது இறுதி ஆண்டு பி.பார்ம் படிக்கும் மாணவர்கள், தமிழகம் முழுவதும் எம்.பார்ம் நுழைவுத்தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இந்த நுழைவுத்தேர்வை கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 4 மாதம் தள்ளி வைக்க மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருந்தியல் (பி.ஃபார்ம்) இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் இளநிலை மருந்தியல் (பி.பார்ம்) பட்டப்படிப்பை முடித்தப் பிறகே நாங்கள் முதுநிலை மருந்தியல் (எம்.பார்ம்) நுழைவுத்தேர்வை எழுதுவோம். கடந்த ஆண்டு கூட இந்த நுழைவுத்தேர்வு விரைவாக இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் பி.பார்ம் மாணவர்கள் ஒருங்கிணைந்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஏற்று அத்தேர்வை ஒத்தி வைத்தது. அதன்பிறகு நடந்த தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்கு மாறாக இம்முறை முதுநிலை மருந்தியல் (எம்.பார்ம்) படிப்பிற்கான நுழைவுத்தேர்வு முன்கூட்டியே வரும் 29.10.2022 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு கடந்த 2ம் தேதி வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுக்கான எம்.பார்ம் நுழைவுத் தேர்வு நடந்துள்ளது. அதற்குள் இந்த ஆண்டுக்கான எம்.பார்ம் நுழைவுத் தேர்வை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பால் அனைத்து பி.பார்ம் இறுதியாண்டு மாணவர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இறுதி ஆண்டு தேர்வுகளான 7ஆம் மற்றும் 8ஆம் செமஸ்டர் தேர்வுகள் கரோனா காரணமாக கால தாமதமாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பி.பார்ம் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களும் இந்த நுழைவுத்தேர்வுக்கு 3ஆம் ஆண்டிலிருந்தே ஆயத்தமாகி உள்ளனர். தற்போது எம்.பார்ம் நுழைவுத்தேர்வு முன்கூட்டியே நடப்பதால் எழுத முடியாமல் போகிறது. இன்று எங்களுக்கு இந்த நெருக்கடி அமைய கரோனா மட்டுமே காரணம். எனவே, எங்கள் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தியல் பல்கலைக்கழகத்திற்கும், இறுதி ஆண்டு தேர்வை விரைந்து நடத்துமாறும், அதற்கு பின்னர் முதுநிலை மருந்தியல் (எம்.பார்ம்) நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மதுரை மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”எங்களுக்கு இன்னும் எம்.பார்ம் நுழைவுத்தேர்வு அறிவிப்பு எதுவும் வரவில்லை” என்றனர்.