குழந்தைகள் மீது மிகுந்த அன்பும் ஆர்வமும் ஜவஹர்லால் நேரு கொண்டிருந்ததால், அஜ்மீரைச் சேர்ந்த ராம் நாராயணன் சௌத்ரி இந்தியாவின் எதிர்காலம் பற்றி நேருவிடம் பேட்டி எடுக்க 1958-ல் விருப்பம் தெரிவித்தார். இந்த பேட்டியின் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களை தர முடியும் என்ற நம்பிக்கையில் நேருவும் ஒப்புக்கொண்டார்.
இப்பேட்டி, Nehru in his own words என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. அதனை அ.லெ. நடராஜன் தமிழாக்கம் செய்தார். பேட்டியில் குழந்தைகள் பற்றி நேரு கூறியது:
நீங்கள் குழந்தைகளை மிகவும் நேசிப்பதற்கு என்ன காரணம்? – இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள். குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் அமையும்.
குழந்தைகளை அடிப்பதையும் திட்டுவதையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – குழந்தைகளை அடித்துத் தண்டிப்பதை நான் அங்கீகரிக்கவில்லை. அதற்காகப் பெரியவர்களையும் குறைகூற விரும்பவில்லை. குழந்தைகள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு விதத்தில் தண்டனை வேண்டியதுதான். ஆயினும் குழந்தைகளை அடிப்பதையோ அல்லது நையப்புடைப்பதையோ நான் விரும்பவில்லை.
குறும்பு செய்யும் குழந்தைகளைத் திருத்துவதற்கு சரியான வழியைக் கூறுங்கள்? – குழந்தைகளை திருத்துவதற்கு ஒரே ஒரு வழி, அவர்களை அன்பின் மூலமே வசப்படுத்துவதுதான். குழந்தைக்கு உங்களிடம் நம்பிக்கை ஏற்பட வேண்டும். அவர்களுக்கு உங்களிடம் நம்பிக்கை ஏற்படாத வரை, குழந்தைகளை உங்களால் திருத்த முடியாது. உங்களை நண்பன் என்று கருதாதவரை, தன் நன்மைக்குத் தான் கூறுகிறீர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படாத வரை நீங்கள் குழந்தைகளை திட்டுவதும், அடிப்பதும் ஒரு பயனையும் தராது.