கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

கோவையில் 1998 பிப்.14-ல் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி கோவை குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டு கோவை குண்டு வெடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 10 மாத காலமாக பதிவுத்துறையில் பல நூறு கோடி கையூட்டு பெறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவர்களுக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளதா?. பாஜக 15 நாள் அவகாசம் தருகிறது. இதற்குள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் புகைப்படங்களை போஸ்டர்களாக அடித்து ஒட்டுவோம். அவர்களை கைது செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்.

கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்துள்ளது. கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த 3 மாதங்களில், துப்பாக்கி பயன்பாடு வந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும். எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சிதான் போட்டி போட்டு ஆட்சிகளைக் கலைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.