மதுரையில் கல்லூரிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபடும் இளைஞர்களால் மாணவிகள், அவர்களது பெற்றோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே மகளிர் கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி வழியே சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள், மது போதையில் மாணவிகளை அச்சுறுத்தினர். அப்போது ஒரு மாணவியின் தந்தை இதைத் தட்டிக்கேட்டார். அப்போது அக் கும்பலை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர்.
அதேபோல் அக்.30-ம் தேதி தேவர் ஜெயந்தியன்று சொக்கிகுளம் பகுதி தனியார் மகளிர் கல்லூரிக்குள் மோட்டார் சைக்கிளில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், காவலாளியைத் தாக்கியதுடன் மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவங்கள் பெற்றோர், மாணவிகளிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற அசாதாரண சம்பவங்கள் தொடராமல், பாதுகாப்பு கருதிமகளிர் கல்லூரி அருகில் காவல்துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என மாநகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வலியுறுத்தி உள்ளார்.