மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் புதுகுப்பம், நரம்பை, பனித்திட்டு மற்றும் நல்லவாடு, பூரணாங்குப்பம் புதுகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீன்பிடி தொழில் செய்ய ஏதுவாக சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்துதர அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கான நடவடிக்கையில் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இன்று(அக். 13) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். முதலில் நல்லவாடு கிராமத்துக்கு சென்ற அவர் அங்குள்ள முகத்துவாரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பனித்திட்டு கிராமத்தில் உள்ள முகத்துவார பகுதியையும் ரங்கசாமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் இயற்கையாக அமைந்துள்ள பனித்திட்டு பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இது குறித்து மத்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் கடல் மேலாண்மை துறை அதிகாரிகள் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான சூழல் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அப்பகுதி மக்கள், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் மீன்பிடித் துறைமுகத்தை விரைவில் பனித்திட்டு பகுதியில் அமைத்துத்தர வேண்டுமென முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த ஆய்வின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், ஏம்பலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமிகாந்தன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, மீன்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை, துறைமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.