கலைஞர் கோட்டத்தை திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் மற்றும் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். உடல் நலக் குறைவு காரணமாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.