கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையால், ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, திங்கள் இரவு முதல் செவ்வாய் வரை மொத்த ஜவுளி வியாபார சந்தை நடக்கிறது. இந்த சந்தையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்வர்.
தொடர் மழையால் கடந்த வாரம் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், வெளிமாநில வியாபாரிகள் வருகையால் நேற்றைய விற்பனை அதிகரித்தது. இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மொத்த ஜவுளி வியாபாரம் அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வந்த வியாபாரிகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், பொங்கல் பண்டிகைக்கான கொள்முதலை மேற்கொண்டனர். இதனால், மொத்த ஜவுளி வியாபாரமும், சில்லறை விற்பனையும் அதிகரித்தது, என்றனர்.