ராஜ்கோட்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது டி 20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. 3–வது ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இழப்பதில் இருந்து தப்பித்தது. இந்நிலையில் 4–வது ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்திலும் வெற்றி நெருக்கடியுடனே ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். ருதுராஜ் கெய்க்வாட் பார்மிற்கு திரும்பியிருப்பது தொடக்க பேட்டிங்கை வலுவடையச் செய்துள்ளது. கடந்த ஆட்டத்தில் நடுவரிசை பேட்டிங் ஆட்டம் கண்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் கவனமுடன் செயல்படக்கூடும்.
விசாகப்பட்டினத்தில் யுவேந்திர சாஹல், அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். புவனேஷ்வர் குமார் சீராக செயல்பட்டு வருகிறார். அவேஷ் கான் இதுவரை இந்த தொடரில் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை வழங்கினாலும் விக்கெட் ஏதும் கைப்பற்றாதது குறையாக உள்ளது. அதேவேளையில் ஹர்ஷல் படேல் பார்மிற்கு திரும்பி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.