நியூசிலாந்தில் 6 மாதத்துக்குப் பிறகு கரோனா உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது,” மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால், கரோனா தொற்றை சீக்கிரமாக விரட்டிவிடலாம். கரோனாவை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்படும். அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்” என்று அறிவித்தார்.

நியூசிலாந்தில் இதுவரை 6 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் திடீர் அறிவிப்பால் நியூசிலாந்து மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.