சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் 4 படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரம் அவ்வப்போது குறைந்துவந்தாலும், சில நாட்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்புகள் 2000-க்கும் குறைவாக இருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் பல்வேறு படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள். தற்போது சூர்யா தனது 2டி நிறுவனம் தயாரித்து வரும் 4 படங்களை அமேசான் நிறுவனத்தில் வெளியிட முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘உடன்பிறப்பே’, தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ஜெய்பீம்’, சாரோவ் சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘ஓ மை டாக்’, அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ உள்ளிட்ட படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகவுள்ளன.
செப்டம்பரில் ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, அக்டோபரில் ‘உடன்பிறப்பே’, நவம்பரில் ‘ஜெய் பீம்’, டிசம்பரில் ‘ஓ மை டாக்’ படங்கள் வெளியாகவுள்ளன. ஒரே சமயத்தில் தனது 4 படங்களை ஓடிடி நிறுவனத்துக்கு சூர்யா கொடுத்திருப்பது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.