பந்தலூர் அருகே அம்மங்காவு பொன்னானி சாலையோரத்தில் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்மங்காவு பகுதிக்கு செல்லும் அம்மங்காவு – பொன்னானி சாலை உள்ளது. இதன்வழியாக ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

பசுந்தேயிலை, கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் பெரிய வாகனங்களும் இந்த சாலையில் சென்று வருகின்றன. சாலையோரத்தில் முட்செடிகள்  வளர்ந்துள்ளது. இதனால், எதிரில் வரும் வாகனத்திற்கு வழி விட முடியாமல் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.  புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருக்கும். இவை நடந்து செல்வோரை தாக்கும் அபாயமும் உள்ளது. இந்த முட்செடிகளை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் வெட்டி சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சாலையில் வளர்ந்துள்ள முட்செடிகளை விரைவில் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.