புதுடெல்லி: குரங்கு அம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தார். குரங்கு அம்மை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (ஆக.2) விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கு அம்மைக்கு எதிராக சரியான தடுப்பூசியைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது விஞ்ஞானிகள் குரங்கு அம்மை வைரஸை தனியாக அடையாளம் கண்டு பிரித்துள்ளனர். அதனால் அவர்கள் விரைவில் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

குரங்கு அம்மை தொடர்பாக விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது. கரோனா வைரஸை எதிர்கொண்டதில் இருந்த அனுபவத்தைக் கொண்டு குரங்கு அம்மையை கண்காணிக்க மத்திய குழு அமைத்துள்ளது.

குரங்கு அம்மை இந்தியாவிலும், உலகிலும் புதிய நோய் அல்ல. 1970களில் இருந்தே இந்த வகை வைரஸ் பாதிப்பை உலகம் எதிர்கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை மீது கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இந்தியாவும்தான். கேரளாவில் முதல் குரங்கு அம்மை தொற்றாளர் கண்டறியப்படும் முன்னரே மாநிலங்களுக்கு குரங்கு அம்மை தடுப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.இந்தியா மீது WHO நம்பிக்கை: குரங்கு அம்மை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர், “குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.குரங்கு அம்மையை உருவாக்கும் வைரஸ் ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது. 1979, 1980-களுக்குப் பின்னர் பெரியம்மை தடுப்பூசி பரவலாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதுவும் கூட இந்த வைரஸ் இப்போது மீண்டும் உலகில் உலா வர காரணமாகியுள்ளது.

பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக பாதுகாப்பு நல்கினாலும் கூட குரங்கு அம்மைக்கு என பிரத்யேகமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நம்மிடம் இப்போதுள்ள பெரியம்மை தடுப்பூசிகள் எல்லாம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகள். அவையும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கின்றன. குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், குரங்கு அம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.