நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்தே இன்று நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி வாக்களிப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

முன்னதாக பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இது மிக முக்கியமான காலகட்டம். விடுதலையின் 75வது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் நாம் நமது தேசத்திற்கான புதிய இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். இந்த மழைக்கால கூட்டத்தொடரை உறுப்பினர்கள் பயனுள்ளதாக்கித் தர வேண்டும். நாடாளுமன்றம் வெளிப்படையான விவாதஙகளுக்கான மேடை” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் வாக்களிப்பு: தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அவர் நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். அங்கே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வைக்கப்பட்டிருந்த பிரத்யேக வயலட் நிற பேணாவைக் கொண்டு வாக்களித்தார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதிலும் குறிப்பாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலையே வாக்குப்பெட்டி விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

வாக்கு மதிப்பு எவ்வளவு? எம்பி, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு எம்ஏல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 175 ஆக உள்ளது. மக்கள் தொகை குறைவாக இருக்கும் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 7 ஆக உள்ளது.