ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத் துறை, நாளை நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது. அதோடு, மிஷ்ராவுக்குச் சொந்தமான இடங்கள் உள்பட மொத்தம் 19 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இதன் அடிப்படையில், ரூ.1,000 கோடி அளவுக்கு பண மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவெடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், இந்த விசாரணை ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இதில் நாளை (நவ.3) நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின்போது, ஹேமந்த் சோரனின் பதில்கள் பதிவு செய்யப்படும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட்டில் சில சுரங்கங்களை ஹேமந்த் சோரன் தனது பெயருக்கு ஒதுக்கிக் கொண்டதாக பாஜக, தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்தது. இந்தப் புகார் குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம், அவரை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாகவும், மேலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பான தனது அறிக்கையை தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இதனால், ஹேமந்த் சோரன் பதவி விலக நேரிடும் என தகவல் வெளியாகியது. அந்த பரபரப்பு அடங்கிய நிலையில், தற்போது அமலாக்கத் துறை விசாரணை புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.