சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’ பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, பாரிமுனை, தம்புசெட்டித் தெரு, சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை கட்டிடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் அமைக்கப்படவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சென்னை, கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளி நுழைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “சென்னை, தம்புச்செட்டித் தெருவில் சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட இடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இன்று ஆய்வு செய்யப்பட்டிருக்கின்ற சுமார் 2,652 சதுரடி பரப்பளவு கொண்ட இடமானது சாமுண்டீஸ்வரி அம்மாள், மருத்துவமனை அமைப்பதற்காக உயில் எழுதி வைக்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
1980-ம் ஆண்டு இங்கு மருத்துவமனையை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் திறந்து வைத்துள்ளார். சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான இந்த இடத்தில் காளிகாம்பாள் திருக்கோயில் மற்றும் கந்தக்கோட்டம் திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திடும் வகையில் மருத்துவ மையம் விரைவில் அமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
ஆளுநரிடம் அண்ணாமலை அளித்த ஊழல் பட்டியல் தொடர்பான கேள்விக்கு, “அண்ணாமலை கூறியிருக்கின்ற புகார்கள் எவை எவை என்று தெரிந்த பிறகு அதற்கு முழுவதுமாக பதில் சொல்ல திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கின்றது. எங்களுக்கு மடியிலே கனமில்லை, அதனால் வழியிலே பயமில்லை. பார்ட் 2 அல்ல, பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதைக் கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அண்ணாமலையில் நடைபயணம் தொடர்பான கேள்விக்கு, “அண்ணாமலை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காகவோ, மருத்துவர்களின் ஆலோசனைபடியோ நடைபயணத்தை மேற்கொள்கிறாரோ? தெரியவில்லை. ஆனால், நடை பயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதல்வர் தலைமையில் அமையப் போகின்ற கூட்டணிதான் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் நடைபயணத்துக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.