கரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் நாட்டின் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.3.79 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இது இதற்கு முன் இல்லாத அதிக அளவாகும். மேலும் இது 20 சதவீத உயர்வு ஆகும். அதிக அளவாக அரிசி ஏற்றுமதி ரூ.73 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல கோதுமை ஏற்றுமதி ரூ.16,625 கோடியாகவும், சர்க்கரை ரூ.34,922 கோடியாகவும், கடல் பொருட்கள் ரூ.58,532 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக கோதுமை ஏற்றுமதி 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதியில் முன்னிலையில் இருக்கும் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெறுவதால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வெளியுறவு வர்த்தக கொள்கையின்படி, தாராள வர்த்தக நடவடிக்கையின் கீழ் கோதுமை வருகிறது. எனவே, கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு அரசின் உரிமமோ அனுமதியோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வாழை மற்றும் பேபிகார்ன் ஏற்றுமதி தொடர்பாக இந்தியா, கனடா இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.