வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையையும் அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம்  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.  கூட்டத்தில் நீர்வளத்துறை, வேளாண்துறை, தொழிற்துறை உள்பட 11 அமைச்சர்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கடந்த 2020இல் அமைக்கப்பட்ட இந்த அதிகார அமைப்பு முதன் முறையாக இன்று கூடியது.
கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதலமைச்சர்,  “வளமான தமிழகம் அமைக்க வேளாண்மையையும், டெல்டா மாவட்டங்களை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும். வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையையும் அரசு அனுமதிக்காது” என்று உறுதியளித்தார்.
உழவர்களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க துணை நிற்க வேண்டும் என்ற முதலமைச்சர், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டுச் சட்டத்தில் உள்ள எல்லா பிரிவுகளும் செயல்பாட்டுக்கு வரும் வகையில், விவசாயிகளும்,  விவசாய சட்ட பிரதிநிதிகளும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, காவிரி டெல்டா பகுதிக்கான நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்க  ஆலோசனையும் வழங்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.