தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஏசி பேருந்துகள் 18 மாதங்களாக இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 250 ஏசி பேருந்துகள் உள்ளன. ஒரு ஏசி பேருந்தின் விலை சுமார் ரூ.24 லட்சம். இந்த பேருந்துகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்பட்டன.
இப்பேருந்துகள் 250 கி.மீ.க்கு மேல் நீண்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டன. சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிக அளவில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்தனர்.
கரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு கரோனா பரவ வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டதால் அப்போது ஏசி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
கரோனா 2-ம் அலை பரவியபோது சில மாதங்கள் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் பரவல் குறைந்ததால் பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போதும் ஏசி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் புதிதாக வாங்கப்பட்ட ஏசி பேருந்துகள் சில மாதங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் கடந்த 18 மாதங்களாக இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் பேருந்தும், அதில் உள்ள ஏசி இயந்திரமும் பழுதடைந்து வருகின்றன.
ஏசி பேருந்துகளில் தினமும் ஒரு பேருந்துக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வருவாய் கிடைத்து. அந்த வகையில் 250 பேருந்துகளுக்கும் சேர்ந்து தினமும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனத்தின் இணைப் பொதுச் செயலர் எஸ்.சம்பத் கூறியதாவது:
ஏசி விமானம், ரயில், தனியார் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெரிய கடைகளில் ஏசி பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. இதனால் ஏசி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏசி பேருந்துகளை தொடர்ந்து இயக்காமல் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் ஏசி இயந்திரங்கள் பழுதடையும். அதை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வர பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டி வரும். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்துக் கழகங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வரும் நிலையில், ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்கினால் வருவாய் இழப்பை ஓரளவு சரி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.