தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல; அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய விண்வெளி சங்க தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். நிகழ்வில் பேசிய அவர், அரசின் தேவையில்லாத பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதுதான் மத்திய அரசின் கொள்கை என குறிப்பிட்டார்.
இந்திய விண்வெளி சங்க தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று விண்வெளித்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வலிமை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. இதற்கு தடையாக உள்ளவற்றை அகற்றுவதுதான் அரசின் பொறுப்பு. தற்போது உள்ளதைபோன்ற தீர்க்கமான அரசு இதுவரை இந்தியாவில் இருந்தது இல்லை என்று குறிப்பிட்டார்.
விண்வெளி சீர்த்திருத்தங்களில் அரசின் அணுகுமுறை 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது தனியார் துறைக்குப் புதிய கண்டுபிடிப்புக்கான சுதந்திரம். இரண்டாவது ஒரு திறனாளர் என்ற முறையில் அரசின் பங்கு. மூன்று, எதிர்காலத்திற்கு இளைஞர்களைத் தயார் செய்தல். நான்கு, சாமானிய மனிதரின் முன்னேற்றத்திற்கான ஆதாரவளமாக விண்வெளித்துறையை பார்ப்பது என அவர் கூறினார்.
தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல; அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தியாகும் என்று கூறிய அவர், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் கொள்கை தெளிவானது என்றும் அரசின் தேவை ஏற்படாத பெரும்பாலான துறைகள் தனியார் துறைகளுக்கு திறந்துவிடப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
ஏர் இந்தியா தொடர்பான முடிவு அரசின் உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது என்றும் பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார்.
உலகத்தில் எண்ட்-டூ-எண்ட் விண்வெளி திறன் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். செயற்கைக்கோள்கள், ஏவு வாகனங்கள், பயன்பாடுகளிலிருந்து கிரகங்களுக்கு இடையேயான பயணங்கள் வரை விண்வெளி தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் நாம் தேர்ச்சி பெற்றுள்ளோம் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.