சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் போன்ற நாடகங்களை நிறுத்திவிட்டு நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றப்படாத அரசாக கடந்த 9 மாத காலமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய இருப்பதாகவும் ”நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? என்கிற ரகசியம் எங்களுக்கு நன்கு தெரியும்” அதற்குண்டான ரகசிய திட்டம் தங்கள் இடத்தில் உள்ளதாகவும் கூறினார்கள்.

ஆனால், தங்களுடைய வாக்குறுதி வெற்றி பெறாது என்பது தெரிந்திருந்தும் பொய்யானவற்றை மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தார்கள். இதை மக்கள் தற்போது நன்கு உணரத் தொடங்கியுள்ளார்கள். மக்களிடம் நீட் தேர்வு ரத்து என்பதை மறைப்பதற்காக திமுக அரசு தமிழினம், தமிழுணர்வு என்ற அடிப்படையில் தங்களுடைய தோல்விகளை ஆளுநர் மீது குற்றம்சாட்டுவது, அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி அதைத்தொடர்ந்து நாளை சிறப்பு சட்டப்பேரவை நடத்தி நீட் தேர்வு ரத்து செய்வது என்பது ஒரு நாடகம்.

நீட் தேர்வு ரத்து என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாகும். தமிழக அரசு ஆக்கபூர்வமாக செயல்பட்டு நீட் தேர்வு ரத்து என்ற பொய்யான வாக்குறுதிகளை இனியும் கூறாமல் உச்ச நீதிமன்றத்தை நாடி நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும். இனிமேலாது தமிழக அரசு நீட் தேர்வு ரத்து என்று பொய்ப் பிரச்சாரம் செய்யாமல் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் நலன் காக்க பாடுபட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.