கரூர்: கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வெழுத தாமதமாக வந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு கரூர் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில இன்று (மே 21) காலை 9.30 மணிக்கு தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் 17,114 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. முன்னதாக, 9 மணிக்கு வந்த தேர்வர்கள் யாரும் தேர்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு கலைக்கல்லூரி அய்யர்மலையில் அமைந்துள்ளது. இங்கு 9 மணிக்குப் பின்னர் கைக்குழந்தையுடன் வந்த பெண் தேர்வர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. 9 மணிக்கு தேர்வுக்கூடத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டதால். தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்கூடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததே தாமதத்திற்கு காரணம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.

 

இதுபோல பல்வேறு தேர்வுக்கூடங்களில் 9 மணிக்கு தேர்வுக்கூட நுழைவுவாயில் மூடப்பட்டதில் 9 மணிக்கு மேல் தேர்வெழுத வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தாமதம் காரணமாக தேர்வில் பங்கேற்க இயலவில்லை.

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி தேர்வுக்கூடத்தில் நடத்த தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட 17,114 பேரில் 14,882 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2,452 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.