காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருமழை கொட்டித் தீர்த்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 36 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் கிஸ்துவார் மற்றும் கார்கில் பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் செனாப் ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் ஹோஞார் டச்சனில் ஆறு வீடுகளும் ஒரு ரேஷன் கிடங்கும் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 36 பேர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து காவல்துறை, ராணுவம், என்.டி.ஆர்.எஃப், சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் தேடும் பணி நடந்து வருகிறது.
கிஸ்துவார், கார்கிலில் மேகவெடிப்பை அடுத்து மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘கிஸ்துவார் மற்றும் கார்கிலில் ஏற்பட்ட மேகவெடிப்பை அடுத்து அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. அங்குள்ள மக்களின் பாதுகாப்பிற்கும், நலனுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.