சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார். இதன்பிறகு முதல்வர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக மரக்கன்றுகளை முதல்வர் நட்டார்.

பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், தீவிர தூய்மைப் பணி மற்றும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ – மாணவியர்களுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்: 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமைப் படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டுப் பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வணிக வரித் துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர் சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.