தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளால் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழி வகுப்புகளே நடந்தன. இடையில் சில மாதங்கள் திறந்து மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த 1ம்தேதியன்று 1முதல் பிளஸ்2 வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதேநேரத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த திருப்புதல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நாளை மறுநாள் (9ம் தேதி) தொடங்க உள்ளது. இதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. பள்ளி கல்வித்துறை நடத்தும் திருப்புதல் தேர்வுக்கு முதல் முறையாக அரசு தேர்வு துறை மூலமாக மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு நாளை மறுதினம் 9ம்தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கி வரும் 15ம்தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும்.
அதேபோல் பிளஸ்2 மாணவர்களுக்கு 9ம்தேதி தொடங்கி 16ம்தேதி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை தேர்வுத்துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ? அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வேறு பள்ளியில் மேற்கொள்ளப்படும். மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில் இதுபோன்ற திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் வரும் பொதுத்தேர்வில் அச்சமின்றி தேர்வு எழுதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.