பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீட்டை தீர்மானிக்க எட்டு வாரங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலையில் சென்ற போது மரம் விழுந்த இரு வேறு விபத்துக்களில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பொது இடங்களில் ஏற்படும் விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது எனவும் சில நிகழ்வுகளில் 50 லட்சம், 10 லட்சம், ஒரு லட்சம் என இழப்பீடுகள் வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பாரபட்சத்தைத் தவிர்க்க, பொது இடங்களில் ஏற்படும் விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீட்டை தீர்மானிக்க எட்டு வாரங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இழப்பீடு கோரி 12 வாரங்களில் அரசுக்கு விண்ணப்பிக்க மனுதாரர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பங்கள் மீது புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட எட்டு வாரங்களில் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அரசு வழங்கும் இழப்பீடு என்பது, பாதிக்கப்பட்டோர் காப்பீடு கோர தடையாக இருக்காது எனக் குறிப்பிட்ட நீதிபதி, உள்கட்டமைப்புகளை முறையாக பராமரித்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.