செவ்வாய் மதியம் 3.30 மணி ஆட்டத்தில் இன்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் திடத்துடன் ரிஷப் பந்த் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 1994-95 இலங்கை அதிரடி பாணியில் அணுகுமுறையை மாற்றியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஷார்ஜாவில் மோதுகின்றன.
இதுவரை இரு அணிகளும் 27 முறை மோதியதில் கொல்கத்தா கைதான் ஓங்கியுள்ளது. 14 முறை வென்றுள்ளது, டெல்லி அணி 12 முறையே வென்றுள்ளது. கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 சுற்றில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா முதலில் பேட் செய்து 154/6 என்று முடிய இலக்கை விரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் 156/3 என்று வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் பிரிதிவி ஷா 41 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 46 என்று தொடக்கக் கூட்டணியே 132 ரன்களை விளாசியதில் கொல்கத்தா மடிந்தது 16. 3 ஒவர்களில் ஆட்டம் முடிந்தது. கொல்கத்தா கண் முன்னால் பிரிதிவி ஷா காட்டடி வந்து போகுமா இல்லையா? அதுவும் ஷிவம் மாவி என்ற இளம் அதிவேக பவுலரை ஒரே ஓவரில்ல் 25 ரன்கள் விளாசியதை மறக்கத்தான் முடியுமா? வருண் சக்ரவர்த்தியே 4 ஓவர் 34 ரன் விக்கெட் இல்லை. அன்று ஜடேஜாவிடம் சொதப்பிய பிரசித் கிருஷ்ணா 3 ஓவர் 36 ரன்கள் விளாசப்பட்டார், பிரிதிவி ஷாவுக்குப் போட முடியவில்லை என்பதுதான் அன்றைய உண்மை.
சரி சுனில் நரைன் என்ன ஆனார் என்கிறீர்களா அவர் 4 ஓவர் 36 ரன். பாட் கமின்ஸ் மட்டும்தான் அன்று தேறினார், 4 ஓவர் 24 ரன் 3 விக்கெட். ஆனால் இந்த 2ம் சுற்றில் அன்று ராஜஸ்தான் ராயல்ஸை ஊதியது டெல்லி கேப்பிடல்ஸ். மாறாக சிஎஸ்கேவிடம் மடிந்தது கொல்கத்தா, அது உஷ் கண்டுக்காதீங்க போட்டியாக இருந்தாலும் அதே போல் ஒன்று இன்றும் நடக்கலாமல்லவா?
கொல்கத்தாவின் புதிய அவதாரத்தில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர் தொடக்கத்தில் வெளுத்து வாங்குகின்றனர், ராகுல் திரிபாதியின் எழுச்சியும் டெல்லிக்கு புதிது. ஆனால் கில் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆட வேண்டும், பெரிய டேலண்ட் ஆனால் அதற்கு அவர் நியாயம் கற்பிக்காமல் அவுட் ஆகி விடுகிறார். டெல்லி அணியிலும் பிரிதிவி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மையர் என்று அடிதடி குரூப் உள்ளது. ஸ்பின்னில் அஸ்வின், அக்சர் படேல் உள்ளனர்.
எல்லாரையும் விட வெங்கடேஷ் அய்யர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதிக்கு சவாலே ஆன்ரிச் நார்ட்யே, கேகிசோ ரபாடாதான். ஆவேஷ் கானும் அச்சுறுத்தும் வேகம் கொண்டவர்தான். எனவே இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கொல்கத்தா அணி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்: ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன், டிம் சவுதி, லாக்கி பெர்கூசன்.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
டெல்லி அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: ரிஷப் பந்த், ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயஸ் அய்யர், பிரிதிவி ஷா, ஷிம்ரன் ஹெட்மையர், ஆன்ரிச் நார்ட்யெ, ரபாடா, அஸ்வின் அமித் மிஸ்ரா, அக்சர் படேல்