வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப்பகுதி தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021ல் தொடங்கப்பட்டன. அதில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
2ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2ம் கட்ட அகழாய்வில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இப்பகுதியில் ஏராளமான பழங்காலப் பொருள்கள் கண்டுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தொல்லியல்துறை அலுவலர்கள் கூறுகையில், முதலாம் கட்ட அகழாய்வைத் தொடர்ந்து 2ம் கட்ட அகழாய்விலும் ஏராளமான பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச்செல்கின்றனர். தற்போது கிடைத்துள்ள சுடுமண் பானை ஓடுகள் மற்றும் அகல் விளக்குகள் மூலம் பண்டை காலத்தில் வாழ்ந்த முன்னோர்களின் நாகரீகத்தையும் பண்பாட்டு வாழ்க்கை முறையையும் அறிய முடிகிறது என்றனர்.