டெல்லி: டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் இந்த கூட்டுக் கருத்தரங்கம் 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் இக்கூட்டத்தில் உரை ஆற்றினர்.
யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என். பண்டாரியும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின் நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
இதுகுறித்து இன்று பிரதமர் மோடி பேசுகையில், தீர்ப்புகள் என்பது சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய மொழிகளில் இருக்க வேண்டும்; புரிந்துகொள்ள முடியாவிடில் அதும் வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படும், தவிர நீதியாக இருக்காது என பிரதமர் தெரிவித்தார். பின்பு, மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஏன் பயிற்றுவிக்கப்படுவதில்லை? மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது? உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மொழி என்பது நீதியை பெறுவதற்கான ஒரு வகையான தடையாக இருப்பதாக டெல்லியில் பிரதமர் மோடி பேசினார்.