வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:

“தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிக்கின்றது. இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை. எனினும், புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர்‌, விழுப்புரம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும்.

ஏனைய தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 1 முதல் இன்றுவரை பெய்யவேண்டிய மழையளவு 33 செ.மீ. ஆனால் பெய்த அளவு 54 செ.மீ. ஆகும். தமிழகத்தில் இயல்பைவிட சுமார் 61% அதிக மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் அதிகபட்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில், ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குமரிக் கடல், தென்மேற்கு வங்கக் கடல், தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சூறைக் காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.