பெங்களூருவில் நேற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உக்ரைன் போரில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீனின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களுக்கு வந்த புகைப்படங்களை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் அவரது உடலை பெங்களூரு கொண்டுவருவது குறித்து பேசி வருகிறோம். அதிகாரிகள் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். இதே போல காயமடைந்துள்ள கர்நாடகாவை சேர்ந்தவர்களை உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியில் 26 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போரில் சிக்கியவர்களை வெளியேற்ற உக்ரைன் அரசும் முயற்சித்துவருகிறது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிய குழுவாக திரண்டு தேசிய கொடி ஏந்தியவாறு ரயில் நிலையத்துக்கு நடந்து செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.