வருவாய் ஈட்டுவதற்கான வழியில்லாதது உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகாவில் உள்ள பிரபல வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்படும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சில வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
இதனால் இந்த வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்க முடியாத நிலையும், பணம் டெபாசிட் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத கர்நாடக மாநிலத்தில் உள்ள முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வங்கிக்கு சில தடைகளையும் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை முதல் மேற்கண்ட வங்கியின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புதிதாக பணம் போடவோ அல்லது தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில், ‘உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கியிடம், தற்போது போதிய மூலதனம் இல்லை. வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. வாடிக்கையாளர்களின் 99 சதவீத டெபாசிட் தொகை கடன் உத்தரவாத நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். அதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. விதிகளின் அடிப்படையில் ஐந்து லட்ச ரூபாய் வரை அவர்களுக்கு பணம் கிடைக்கும்’ என்று தெரிவித்தன.