மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்துக்கு நேற்று மின் கட்டணம் செலுத்த வந்த நுகர்வோர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

எங்கள் பகுதிக்கு மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள். ஆனால், ஆதார் எண் இணைக்கப்படாததால் கட்டணம் செலுத்த முடியவில்லை. அபராதத்தைத் தவிர்க்க வீட்டுக்குச் சென்று ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும். இதனால், அலைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு அறிவிக்கப்படாத நிலையில், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்று நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. மின் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின் வாரிய அலுவலகத்துக்கு வந்து, எங்களது போர்ட்டல் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும்போது இத்தகைய நிலை ஏற்படவில்லை. ஆனால், தனியாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும்போது, ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளதாக கூறுகின்றனர். அதற்கேற்ப இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதா என எங்களுக்குத் தெரியவில்லை’’ என்றனர்.

இன்டர்நெட் மையத்தினர் கூறும்போது, ‘‘ஆதார் எண்ணை இணைக்காமல் மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. கட்டணம் செலுத்த முற்படும்போது, தானாகவே ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங்க் வந்து விடுகிறது. இதில், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடிகிறது. அதேவேளையில், செல்போனிலிருந்து யூபிஐ மூலம் செலுத்த முடிகிறது’’ என்றனர். மின் வாரிய போர்ட்டல் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும் போது இத்தகைய நிலை ஏற்படவில்லை.