பெலகாவியில் நடை பெற்று வரும் கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்றுஹொசக்கோட்டை சுயேச்சை எம்எல்ஏ ஷரத் பச்சே கவுடா, ‘மேகேதாட்டு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசுகையில், “காவிரி ஆற்றின் குறுக்கேமேகேதாட்டுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. மத்திய நீர்வள ஆணையம் இதற்கான முதற்கட்ட அனு மதியை வழங்கியுள்ளது. மத்திய சுற்றுச் சூழல்மற்றும் வனத்துறையின் ஒப்புதலைபெறுவதற்கு முயற் சித்து வருகிறோம். மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்துள் ளோம். அடுத்த (டிசம்பர் 27-ம் தேதி) கூட்டத்தில் ஆணையம் இதற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். மேகேதாட்டு விவகாரத்தில் அரசு எல்லா நிலைகளிலும் பணிகளை மேற்கொண்டு வருகிறது”என்றார்.
இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “மேகேதாட்டுவில் அணை கட்டாமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்திவருகிறது. இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வரும் ஜனவரி 9-ம் தேதி பெங்களூருவில் இருந்து மேகேதாட்டு நோக்கி பேரணி நடத்த இருக்கிறோம். 10 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் இந்த பேரணி, 19ம் தேதி மேகேதாட்டுவில் நிறைவடையும். அங்கு மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும்” என அறி வித்துள்ளார்.