புதுடெல்லி: வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். நபிகள் நாயகம் சர்ச்சைக்கு இடையே 28ம் தேதி அமீரகத்துக்கும் அவர் செல்கிறார். 48வது ஜி-7 மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று மோடி ஜெர்மனி செல்ல உள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜூன் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனி செல்கிறார். இந்த கூட்டதில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசுவார்.
இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா மற்றும் செனகல் போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன. மாநாட்டின் போது சில வெளிநாட்டு தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. மாநாட்டை முடித்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் மோடி செல்கிறார். அங்கு, அந்நாட்டின் புதிய அதிபர் சயீத் அல் நஹ்யான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நபிகள் நாயகம் குறித்து சமீபத்தில் பாஜ தலைவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழ்நிலையில், மோடியின் அமீரக பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.