பொஷேஃப்ஸ்ட்ரூம்: நடப்பு எப்.ஐ.ஹெச் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் பொஷேஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் மும்தாஜ் கான் (11வது நிமிடம்), லால்ரிண்டிகி (15வது நிமிடம்) மற்றும் சங்கீதா குமாரி (41வது நிமிடம்) என மூவரும் கோல் பதிவு செய்தனர். அதன் பலனாக இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடந்த 2013 மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்திருந்தது. அதுவே இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பையில் பதிவு செய்துள்ள அதிகபட்ச சாதனையாக உள்ளது.

முன்னதாக, நடப்பு தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் வேல்ஸ், ஜெர்மனி மற்றும் மலேசியாவை இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதுவரை இந்தத் தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி அரையிறுதியில் நெதர்லாந்து அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவும் அணி, மூன்றாவது இடத்திற்கான போட்டியில் விளையாடும். இந்த தொடரில் இதுவரை மொத்தமாக 14 கோல்களை பதிவு செய்துள்ளது இந்தியா.

லால்ரெம்சியாமி, மும்தாஜ் கான், லால்ரிண்டிகி, சங்கீதா குமாரி, தீபிகா ஆகியோ கோல் பதிவு செய்துள்ளது. இதில் மும்தாஜ் இந்திய அணிக்காக நான்கு ஆட்டத்திலும் கோல் பதிவு செய்துள்ளார்.