பழநி/திருச்செந்தூர்: தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விடுமுறை தினம் என்பதால் பழநியில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நகர் முழுவதும் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் மேளதாளம் முழங்க அணி அணியாகச் சென்றனர்.
தைப்பூசத் திருவிழாவின் 8-ம் நாள் விழாவையொட்டி நேற்று மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பெரிய நாயகியம்மன் கோயிலில் காலையில் தந்தப் பல்லக்கிலும், இரவில் தங்கக் குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

பாட்டத்துடன் வந்த பக்தர்கள்.படம்: ஆ.நல்லசிவன்
பழநி சந்நிதி வீதி, குளத்துச் சாலை, கிரி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மலைக்கோயிலில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், முதியோர், குழந்தைகள் சிரமப்பட்டனர்.
ரோப் கார் மற்றும் வின்ச் ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்குச் சென்றனர்.
தைப் பூசத் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக இன்று ரத வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. நாளை (பிப்.7) இரவில் தெப்பத் தேர் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுபெறுகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை 4.30 மணியளவில் அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி சந்நிதி தெரு வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உள்மாட வீதிகள், ரத வீதிகள், மூல ரத வீதியை சுற்றி இரவில் கோயில் வந்தடைந்தார்.

பறைவக்காவடிஎடுத்து வந்த பக்தர்கள்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்தனர். புஷ்ப காவடி, கரும்பு காவடி, மயிலிறகு காவடி என பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.